Articles

இயேசு நமக்காக (மனுக்குலத்துக்காக)  கோரச் சிலுவையிலே தம்மையே   பாவநிவாரண  ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்ததை  பெரிய வெள்ளியாகிய  இன்று உலகமடங்கிலும் கிறிஸ்தவர்கள் நினைவு கூருகிறார்கள். நாமும்கூட நினைவுகூருகிறோம். "சிலுவை" சாபத்தின் ஒரு அடையாளம். தேசத் துரோகிகளை அன்று சிலுவையில் அறைந்து மரணதண்டனையை நிறைவேற்றுவார்கள். "மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்" (கலா.3:13) என்று எழுதியிருக்கிறதே. இந்த  கரடு முரடான பாரச் சிலுவையை தாமே ஏற்றுக்கொண்டு, தம் தோளில் சுமந்தவராய்,  கல்வாரி மலைக்கு சர்வலோகத்தின் சகல மனுஷர்களுடைய பாவப்பலிப்பொருளாக  கர்த்தர் இயேசு சென்றார். யாருக்காக? நமக்காக. அப்பொழுதுதான் அழுது புலம்பிக்கொண்டு அவர் பின்னே சென்ற ஸ்திரீகளைப் பார்த்து  "எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்."(லூக்கா 23:27-28) என்று கர்த்தர் இயேசு  சொன்னார். கர்த்தர் இயேசு நமக்காக பாடுகள் பட்ட இந்த நாட்களை பாடுகளின்  பரிசுத்தவாரமாக அனுஷ்டிக்கிறோம். அவரது பாடுகளை தியானிக்கும்போது நம் கண்களில் கண்ணீர் சிந்துகிறோம் இன்று இது பாரம்பரிய  நிகழ்வாகவும் மாறிவிட்டது பிரியமானவர்களே! கர்த்தர் இயேசு நமக்காக எல்லாவற்றையும் தாமே  கல்வாரி சிலுவையில் செய்து முடித்துவிட்டார். அவர் பட்ட பாடுகளை இந்த உலகத்தில் எந்த மனுஷனும்  அனுபவிக்கமுடியாது. நாம் நமது பாவ அக்கிரமங்களுக்காக அடையவேண்டிய தண்டனையை அவரே அடைந்து தீர்த்துவிட்டார். இனி அவருக்காக அழாமல், நமதும் நமது பிள்ளைகளினதும் நிர்ப்பந்த நிலையை உணர்ந்து அழுது புலம்பி நாளுக்குநாள் மனந்திரும்பி மறுரூபவாழ்வுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வதையே கர்த்தர் இயேசு விரும்புகிறார். (இதுவே, அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட நம் ஒவ்வொருவரைக் குறித்தான தேவசித்தமாயிருக்கிறது). அன்று பழைய ஏற்பாட்டு மக்களின் பாவ நிவர்த்திக்காக தேவ ஒழுங்கின்படி கட்டப்பட்ட பலிபீடம், புதிய ஏற்பாட்டின்படி கர்த்தர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்திய சிலுவையை குறிக்கிறது. சர்வ லோகத்தின் சகல மனுஷர்களுடைய பாவங்களை தம்மீது சுமந்தவராய் கிறிஸ்துவாகிய தேவ ஆட்டுக்குட்டி இரத்தம் சிந்தி சிலுவையில் பலியானாரே. அந்த பரிசுத்த இரத்தம் சிலுவையில் வழிந்தோடியது. அதனால், சபிக்கப்பட்ட சாபமான சிலுவை  ஒரு புனித சின்னமாக மாறியது. ஆனால், இது வணக்கத்துக்குரியதல்ல, இது ஒரு சின்னமே. இதனால், தற்போது மரத்தால் செய்த சிலுவையை நாம் தூக்கி சுமக்கவேண்டுமென்று அல்ல. (அவர் நமக்காக அந்த கரடு முரடான கோரமான பாரச்சிலுவையை சுமந்து தீர்த்துவிட்டார்) ஒரு சிலுவைச் சின்னத்தை வைத்து பணிந்துகொள்ளவேண்டுமென்றல்ல. (இவைகளில் எந்த வல்லமையும் இல்லை நாம் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்கிறவர்களாய், சத்தியத்தின்படி நடக்க நம்மை ஒப்புக்கொடுத்து அவர் ஒருவருக்கே சாட்சியாக வாழும்போது, நாம் பிற மனுஷராலும், நம் வீட்டாராலும் அடையும் நிந்தை அவமானங்கள் நமக்கு சிலுவையாக இருக்கிறது. இந்த சிலுவையை  அனுதினமும்  சுமந்துகொண்டு அவரைப் பின்பற்றவே அழைக்கப்பட்டிருக்கிறோம். மத்தேயு 14:27 ல் "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான் என்று நமது கர்த்தர் இயேசு சொல்லுவதை நம் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு இந்த பரிசுத்த வாரத்தை பக்தியோடு ஆசரிப்போமாக

"திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்."(லூக்கா 23:27-28  ) என்றார்.

 ஆமென்!

கிறிஸ்தவர்களாகிய நமக்கு அரசியல் தேவையா?

பிரியமானவர்களே! கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக எழும்பும் உபத்திரவங்களை நோக்கமாக வைத்து இன்று கிறிஸ்தவர்களுக்கென ஒரு அரசியல் கட்சி தேவையென்றும், அரசியலில் ஒரு இடம் தேவையென்றும் சிலர் எண்ணி செயற்படுகிறார்கள். குறிப்பாக அண்மித்துவரும் இந்திய பராளுமன்ற தேர்தலை உதாரணமாகக் கொள்ளலாம். நாம் மறுபடியும் பிறந்தவர்கள், நாம் தமது ராஜ்யத்துக்கென கர்த்தரால் இந்த உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்ற நிட்சயமுடையவர்களானால் நமக்கும், இந்த உலகராஜ்ய அரசியலுக்கும் சம்பந்தமென்னயோவான் 18:36, 17:16  ல் "என் ராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல" என்றும், "நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும்(அதாவது, தம்மை பின்பற்றுகிற தமது சீஷர்களும்) உலகத்தாரல்ல" என்று திட்டமாக நமது கர்த்தர் இயேசு கூறுவதை கவனிக்கவேண்டும்.       இன்று நமக்கெதிராக எழும்பியிருக்கும் உபவத்திரவங்களை நோக்கும்போது கடந்தகால உபவத்திரவங்களைக் குறித்த சரித்திரங்களை நாம் அறியாதவர்கள் அல்லவே. அப்படிப்பட்ட உபத்திரவங்களை இன்னும் நாம் அனுபவிக்க கர்த்தர் விடவில்லையே. அதற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்க எவ்வளவாக கடமைப்பட்டிருக்கிறோம். அரசாங்கங்கள், ஆளுநர்கள் கிறிஸ்தவர்களாகிய நமக்கு விரோதமாக இருக்கிறார்களா?   இயேசுகிறிஸ்துவையும், அவரது பரிசுத்தத்தையும், அவரது பரிசுத்த வேதாகமத்தையும் தூஷிக்கிறார்களா? இது இன்று எமக்குப் புதிதல்ல. புதிய அனுபவமுமல்லவே. நாம் சரித்திரம் அறியாதவர்களா? தேசத்துக்காக, அரசாங்கத்துக்காக, அரச தலைவருக்காக, அதிகாரிகளுக்காக, இந்திய தேசத்திலே சில தேவ ஜனங்களுக்கு உண்டாயிருக்கும் உபத்திரவங்களுக்காக ஜெபிக்க ஒருமனப்படுவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும்போது ஒருவர் வந்து கூடுவதே அரிதாக காணப்படுவதுதான் இன்றைய கிறிஸ்தவர்கள் மத்தியில்    காணப்படும் பரிதாப நிலை. ஆனால், ஐயையோ இந்தியாவிலே  ஆத்துமாக்கள் அழிந்துபோகிறார்களே என்று பெரும் பரிதாபத்துடன் இரண்டு மாதங்களுக்கொரு தடவை இந்தியாவுக்கு பறந்து திரிவோர்   இவ்விதமான ஜெபங்களுக்கு ஐக்கியப்பட மாட்டார்கள். அதேவேளை, தங்கள் சபை கொட்டாட்டங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்றவைகளில் தங்கள் நேரத்தை தாராளமாக செலவிடுவதும், பல வகையான சாக்குப்போக்குகளை முன்வைப்பதுமான பரிதாப நிலையையே இங்கு காணுகிறோம். இதுவே தற்கால உண்மை நிலையாகும். இந்தியாவிலும்கூட பெரும் போஸ்டர் விளம்பரங்களற்ற (பரலோக அரசினால் நினைத்தருளப்படுகிற) தேவ ஊழியர்களும், அவர்களது சபையோரும், அவர்களது குடும்பங்கள், பெண் சகோதரிகள் அநேக துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்க, உலகத்தால் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் என பெயர்கொண்டோர், அவர்கள் பிள்ளைகள், அவர்கள் வீட்டுப் பெண்கள் மாட மாளிகைகளிலே நிம்மதியாக வாழ்ந்து, நிம்மதியாக படுத்தெழும்புகிறார்கள். பாதிக்கப்பட்டு சோர்வுற்றிருக்கும் நமது ஆவிக்குரிய சகோதர சகோதரிகளைக் குறித்து விசாரிப்பதற்கோ ஆன உதவி செய்யவோ, ஒரு அறிக்கை விடவோ மனமில்லை.    இதுதான் இன்றைய கிறிஸ்தவம். ஆகவே, உண்மையான தேவ ஜனமே!  உங்களை அழைத்தவரை மாத்திரமே நம்புங்கள். அரசியலை  நம்பும் ஊழியர்களால்   உங்களுக்குப் பாதுகாப்பில்லை.    அவர்கள் அரியணை ஏறவே விரும்புகிறார்கள். சிறையிலிருந்த வாலிபனான யோசேப்பு நம்பியிருந்த பானபாத்திரக்காரரின் தலைவன் தன் பதவியில் அமர்த்தப்பட்டபின் யோசேப்பை நினைக்காமல் மறந்துவிட்டான் அல்லவா.(ஆதி.40:14-23  ) ஆனால், யோசேப்பை கர்த்தர் மறக்கவில்லை. நீங்கள் கர்த்தரை நம்புங்கள். உங்கள் பரலோக எஜமானுடைய வேலையையே நீங்கள் செய்கிறீர்கள். உங்களை பாதுகாக்க அவர் இருக்கிறார். நீங்கள் உலக அரசிடம் மண்டியிட வேண்டியதில்லை. அவர்கள் உங்களிடம்  வந்து   மண்டியிடச் செய்வார்.  தேவனுடைய ஊழியர் என்று பெயர்களை தரித்துக்கொண்டவர்கள் தங்கள் சுய நன்மைகளுக்காக  அந்நிய தேவர்களை சேவிப்பவர்களிடம் சென்று அவர்கள் முன்னே குனிந்து கைகட்டி நின்ற காட்சியை போட்டோக்களில் கண்டோமே. இப்படிப்பட்டவர்களால்    கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுகிறதா?  இப்படிப்பட்டவர்களுக்கும் நமது ஜீவனுள்ள தேவனாகிய இயேசுவுக்கும் சம்பந்தமுண்டா?    சிந்தியுங்கள். ஆகவே,   ஜீவனுள்ள தேவனால் அனுமதிக்கப்பட்டதே தற்போதைய நிலை பரம்.  பெரிய மீன்களைப் பிடிக்க   சிறிய மீன்களை  கர்த்தர்  பயன்படுத்த வேண்டியதாயிருக்கிறது. ஆனால், ஏற்ற வேளையிலே சிறிய மீன்களை கர்த்தர் பாதுகாப்பார். எனவே கலங்கவேண்டாம். ஆகவே உங்கள் வாக்குரிமையை நேர்மையாக,  சரியாக பயன்படுத்த கர்த்தருடைய உதவியை நாடுங்கள். கிறிஸ்தவர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதால் உங்கள் வாக்குகளை கர்த்தருக்கு சித்தமில்லாத காரியத்தில் பயன்படுத்தாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு ஆசீர்வாதமில்லை.  யோவான் 6:15  ஐ பாருங்கள்.  நமது ஆண்டவரைத் தேடிவந்த அரசியல் மேன்மையை உதறிவிட்டு  விலகிச் சென்றார் என்று காண்கிறோம். ஆகவே நீங்களும் அவரையே பின்பற்றுங்கள்.  இப்பொழுதும் ஆட்சி செய்யும்  அரசாங்கத்தையும் கர்த்தரே அமைத்தவர். ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் அவர்தானே. ரோமர்  13:1-7   வரை எடுத்து வாசித்துப்பாருங்கள். நீங்கள்  கலகமில்லாமல்   அமைதலான ஜீவியம் செய்யும்படிக்கு உங்களை ஆளுகிறவர்களுக்காக, உங்கள் அதிகாரிகளுக்காக ஜெபியுங்கள். இதுவே நாம் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்ட கட்டளையாகும்.  ராஜாக்களை ஏற்படுத்துகிறவரும், ராஜாக்களை தள்ளிவிடுகிறவரும் தமது வேலையை செய்வார். இந்த அவரது வேலையை நாம் கையிலெடுக்கக் கூடாது. அவர் கிரியை செய்ய அவரை விட்டு விடுங்கள்.

இறுதியாக ஒன்றை கூற விரும்புகிறேன். 1. பேதுரு  4:14-16, 2:19-20  வரை வாசியுங்கள். இன்று தேவ பிள்ளைகளுக்கும், அவரது ஊழியருக்கும் உண்டாயிருக்கும் நெருக்கங்கள்  தங்கள் தங்கள் சுய இச்சைகளினால் உண்டானதா? ஆம் என்றால் தேவனோடு உடனே ஒப்புரவாகுங்கள். (சகேயுவின் ஒப்புரவாகுதலை நினையுங்கள்). தேவ ஊழியர்களும் தங்கள் தங்கள் தவறுகளைஎண்ணிப் பார்க்கவேண்டும். மனந்திரும்பவேண்டும். மனந்திரும்பாவிட்டால் சிட்சைகள் விட்டு நீங்காது.

பிரியமான தேவ ஜனமே! கிறிஸ்துவின் நிமித்தம் பாடுபடவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். சிலுவையில்லாத வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கையல்ல. லூக்கா 14:27  ல் "தன் சிலுவையை சுமந்துகொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான்" என்று நமது கர்த்தர் இயேசு சொல்லுவதை நினையுங்கள். 

ஆகவே, கிறிஸ்து இயேசுவின் நிமித்தம் பாடுகளை அனுபவிக்க விரும்பாமல் உலக அரசியலுக்குள் ஓடி ஒழியவோ அல்லது தஞ்சமடையவோ முயற்சிக்கவேண்டாம். பழைய ஏற்பாட்டு எஸ்தர், தானியேல் இவர்கள் பின் செல்ல முயற்சிக்கவேண்டாம். தம்மைப் பின்பற்றிவர அழைத்த கர்த்தர் இயேசுவை பின்செல்ல அர்ப்பணியுங்கள்.

கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதித்து அற்புதமாக வழிநடத்துவாராக!

"ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்." (1.பேதுரு 4:16 )

(ஒவ்வொரு தேவ ஊழியரும், தேவ பிள்ளைகளும் உணர்வடைய வேண்டுமென்பதே எமது தூய்மையான நோக்கமாகும்.)

 

Druckversion Druckversion | Sitemap Diese Seite weiterempfehlen Diese Seite weiterempfehlen
© The Lord is my Banner Full Gospel Church Hamm - Reproduction of parts or of all of the content and files this website is providing in any form of the The Lord is my Banner Full Gospel Church Hamm website is prohibited other than for individual use only and may not be copied and shared with a third party.